நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் இந் நோய் 30 கோடி பேரைத் தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்களில், 2 பேரில் ஒருவர் எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது எலும்பு தேய்மானம் நோயால் இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந் நோயின் ஆரம்ப அறிகுறியாக மூட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரலாம். இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக மூட்டுமாற்று சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது. எனினும், வரும் முன் காக்கும் நடவடிக்கையாக அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் கே, டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் எலும்பு நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
பால் தயாரிப்பு உணவுப் பொருள்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு டம்ளர் பாலில் 300 கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இனிப்பு அதிகம் சேர்க்காமல் பால் உணவுப் பொருள்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தவிர, கடல் மீன்கள், பாசிகள், சோயாபீன்ஸ், மொலாசஸ், முளைவிட்ட கொண்டை கடலை ஆகியவற்றிலும் கால்சியம் சத்து உள்ளது. அன்றாட உணவு வகைகள் மூலம் உடலுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால் நாள்தோறும் 1,000 முதல் 1,500 மில்லி கிராம் கால்சியமும், 300 மில்லி கிராம் மேக்னிசியமும் டாக்டரின் ஆலோசனைபேரில் மருந்தாக உட்கொள்ளலாம்.
எலும்புகள் வலுவடைவதற்கு வைட்டமின் கே, டி ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளில் வைட்டமின் கே-வும், சிறிய மீன்கள், பால், முட்டை, காளான்களில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளன. "பைதோஸ்' என்றழைக்கப்படும் தாவர வகையிலிருந்து கிடைக்கும் சத்துகளும் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் காய்கனிகள், கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பொட்டாசியம், லூடின் சத்து போதுமான அளவு கிடைக்க பழ வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இனிப்பு வகைகள், அதிக உப்பு, குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது. பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸýக்குப் பின்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அந்தப் பருவத்தில் அவர்கள் கால்சியம் சத்து மிகுந்த பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் உடல் எடையைக் குறைக்கும் எளிய பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம். இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நடுத்தர வயது பெண்கள் இப்போதே கடைபிடித்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் இன்றி இனிமையாக வாழலாம்.